tamilnadu

img

கொரோனா நோயாளிகளுக்கு செவிலி ரோபா: பல்கலை. மாணவர்கள் கண்டுபிடிப்பு

 

சென்னை, ஏப்.26 -

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவ, 'செவிலி' எனும் ரோபோக்களை, இந்துஸ்தான் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோய் பாதிப்பிற்குள்ளாவது, பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள இந்துஸ்தான் பல்கலையில், 'ரோபோடிக்ஸ்' ஆய்வு மைய பேராசிரியர் தினகரன் மற்றும் பல்கலை மாணவர் கள் தலைமையிலான குழுவினர், 'ரெனால்ட் நிஸான்' நிறுவன உதவியுடன், புதிய ரோபோக்களை உருவாக்கி உள்ளனர். இதற்கு, 'செவிலி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரோபோக்கள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவர்கள் இருக்கும் வார்டுகளுக்கு சென்று, உணவு மற்றும் மருந்துகளை வழங்கும்.

அப்போது, நோயாளிகளுடன், மருத்துவ பணியாளர்கள், தொலைவில் இருந்து காணொளி திரை வழியாக பேசும் வசதி செய்யப்பட்டுள்ளது.நோயாளிகளுக்கு உதவ, ரோபோக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், அவர்களுடன் மருத்துவ பணியாளர்கள், நேரடி தொடர்பில் இருப்பதை, ஓரளவு கட்டுப்படுத்தி, வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜூவ்காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ஆகியோர் ஆய்வு செய்து, அனுமதி வழங்கினர்.

தற்போது, ஐந்து ரோபோக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.இந்த ரோபோக்கள் எளிமையான வடிவமைப்பும் கட்டமைப்பும் கொண்டிருப்பதால், தேவைப்படும் பட்சத்தில் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் இவற்றை உருவாக்கலாம் என பல்கலை பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

;